‘ஏசி’ இருந்தால் குடும்ப அட்டை சலுகை ரத்தா? வீடு வீடாக ஆய்வு நடத்தும் தமிழகஅரசு

சென்னை:

மிழகத்தின் சில பகுதிகளில் குடும்ப அட்டை ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள், அலுவலர்கள்  வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வின்போது, குடும்பத் தலைவரிடம்  பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்கும் நோக்கிலேயே இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முறைகேடாக குடும்ப அட்டைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கும் நோக்கிலும், வசதி படைத்த பலர், அதற்குரிய வெள்ளை நிற  குடும்ப அட்டைகள் பெறாமல், ஏமாற்றி சலுகை விலையில் மானியப்பொருட்கள் வாங்கி வரும் நிலையில், அதை தடுக்கும் நோக்கில், ‘தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, ஒவ்வொருவர் வீட்டிலும் உபயோகப்படுத்தும், குடும்ப அட்டையின் தலைவரின் பணி, சொந்த வீடு விவரம, ஏசி, பிரிட்ஜ் உள்ளதா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு பதியப்பட்டு வருகிறது.

இந்த புள்ளி விவரங்கள் கேட்கப்படுவதால், பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வீட்டில் ஏசி இருந்தால், குடும்ப அட்டையில் வழங்கப்படும் மானிய சலுகைகள் ரத்து செய்யப்படும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி மக்களை குழப்பி வருகிறது.

இதுகுறித்து தமிழகஅரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.