சென்னையில் 18 புதிய சாலை உள்கட்டமைப்பு திட்டம் : தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை

சென்னை நகர சாலை உள்கட்டமைப்புக்காக மேம்பாலம் நடைபாலம் உள்ளிட்ட 18 திட்டங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னை நகரில் போக்குவரத்து நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் சென்னையில் குடியேறி உள்ளதால் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த புதிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை சரி செய்ய அரசு பல சாலை உள்கட்டமைப்பு பணிகள் குறித்த திட்டங்களை அமைக்க உள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “சென்னை நகரச் சாலை மேம்பாட்டுக்காக 18 புதிய திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான நிலம் கையகப்படுத்த புதிய வளர்ச்சி வங்கி (NEW DEVELOPMENT BANK) யிடம் இருந்து ரூ. 1122 கோடி கேட்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 13 சாலை மேம்பாலங்கள், ரு ரெயில்வே மேம்பாலங்கள், இரு நடை மேம்பாலங்கள் மற்றும் ஒரு ஆற்றுப்பாலம் அமைக்கப்பட உள்ளன.

இந்த சாலை மேம்பாலங்கள் மாதவரம், ராமாபுரம், அக்கரை, கொரட்டூர், மத்திய கைலாஷ், குன்றத்தூர், காட்டுப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, கைவேலி, சேலையூர், வடபழனி – பிடி ராஜன் சாலை சந்திப்பு, மற்றும் மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் கிழக்கு கடற்கரைச் சாலையின் ஒரு பகுதி ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.

டைடல் பூங்கா சந்திப்பில் ஒரு U வடிவிலான மேம்பாலமும், லாடிஸ் பிரிட்ஜ் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையை இணைக்கும்  மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளன. சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து பெருங்களத்தூர் வரை உள்ள நான்கு வழிச் சாலை 8 வழி சலையாக மாற்றப்பட உள்ளது. இந்த திட்டங்கள் குறித்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. வரைவு அறிக்கை தயாரிப்புக்கு ரூ. 1.7 கோடி செலவாகும்” என அறிவித்துள்ளார்.