சென்னை

புலம் பெயர் தமிழர்களைச் சந்தித்து முதலீடு கோர தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது பதவிக்காலத்தில் எந்த ஒரு வெளிநாட்டுப் பயணமும் செய்தது இல்லை. வெளிநாட்டு முதலீட்டுக்காக அவர் சென்னையில் மாநாடு நடத்தி அங்கு வருகை தரும் சர்வதேச முதலீட்டாளர்களிடம்  இருந்து முதலீடுகளைப் பெற்று வந்தார். அவருக்குப் பிறகு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை மாதம் யாதும் ஊரே என்னும் இணையதளத்தைத் தொடங்கினார்

இந்த யாதும் ஊரே என்னும் தளம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வோருக்கு அறிவுரை சொல்லும் பணியைச் செய்து வந்தது. இந்த தளத்தில் ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, சீன, தைவான், பிரான்ஸ் இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி  மக்களுக்கு முதலீடு குறித்த வழிகாட்டியாகச் செயல்பட்டு வருகிறது. இந்த இணைய தளத்தின் மூலம் புலம் பெயர் தமிழர்களை இணைத்து முதலீட்டைப் பெருக்கத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாதம் 28ஆம் தேதி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர், “அநேகமாக வரும் 28 ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் தமது 14 நாட்கள் வெளிநாட்டு பயணத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் செல்கின்றனர். இந்த பயணத்தின் மூலம் யாதும் ஊரே திட்டத்தை உலகெங்கும் கொண்டு செல்ல முதல்வர் எண்ணி உள்ளார். அத்துடன் புலம் பெயர் தமிழர்களைச் சந்தித்து அவர்களின் முதலீடுகளையும் விளம்பரத் தூதர் நியமனம் குறித்து  விவாதம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு அதிகாரி, “முதல்வர் தனது வெளிநாட்டுப் பயணத்தின் போது பல தொழில் நுட்ப மையங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். குறிப்பாகப் பல மின் தொழிற்சாலை,உலகின் மிகப்பெரிய பால் பண்ணை, உள்ளிட்ட  பல இடங்களைப் பார்வையிட உள்ளார். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் முதலீட்டாளர்கள் சந்திப்பு ஒன்றை அவர் நடத்துகிறார். மேலும் புலம் பெயர் தமிழர்களை அவர் செல்லும் ஒவ்வொரு நகரிலும் சந்திக்க உள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.