சென்னை:

வேகமாக நிரப்பி வரும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க உள்ளார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில்  தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள  பெரும்பால்ன அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 9-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.50 அடியாக இருந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. தொடக்கத்தில் 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 61.88 அடியாகவும் நீர் இருப்பு 26.10 டிஎம்சி-யாகவும் இருந்தது. விநாடிக்கு 82 ஆயிரம் கனஅடி வீதம் நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.

அணையின் நீர்மட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 67.40 அடியாகவும், நீர் இருப்பு 30.50 டிஎம்சியாகவும் உயர்ந்தது. அதே வேளையில், நீர்வரத்து விநாடிக்கு 93 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சத்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 73.60 அடியை எட்டியது. நேற்றிரவு வரை ஒரே நாளில் நீர்மட்டம் 12 அடி அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இன்று  கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 20,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கேஆர்எஸ் நிரம்பி வருவதால் விநாடிக்கு 1.51 லட்சம் கனஅடி நீர் திறக்கபப்ட்டு வருகிறது.

இதனிடையே, பிலிகுண்டுலுவில் காவிரியின் நீர்வரத்து விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இது இன்று இரவு 2.50 லட்சம் கன அடி நீராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.

இந்த நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக இன்று மாலை விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.