சென்னை:

மிழக அரசு சார்பில், நாட்டிலேயே முதன்முதலாக கல்விக்கான பிரத்யேக தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழகத்தில்  தொடங்கப்பட்டு உள்ளது. இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான  ஒளிபரப்பை முதலமைச்சர் பழனிசாமி. தொடங்கி வைத்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில்,  தமிழக அரசின் கல்விக்கான பிரத்யேக தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி,  கல்வி தொலைக்காட்சி அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும்  என்றார்.  மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்​கை விகிதம் அதிகரித்து வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள கல்வித் தொலைக்காட்சியை  மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா வழியில், கல்விக்கு முதலமைச்சர் பழனிசாமி முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறார் என்றும், கல்விக்காக தினம், தினம் சிந்தித்து பல வளர்ச்சி பணிகளை செங்கோட்டையன் ஆற்றி வருகிறார் என்றும் பாராட்டு தெரிவித்தார்.

மாணவர்களுக்குள் பல ஆயிரம் திறமைகள் ஒளிந்துகிடக்கின்றன  என்று கூறியவர், ஒவ்வொரு மாணவர்களும் தங்களது தனித்திறமைகளை வெளிகொண்டு வர வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவில் முதல் முறையாக கல்விக்கென தனி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது என்றும், தற்போதைய தமிழக அரசின்  புதிய பாடத்திட்டம் சிறப்பாக இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்  என்றும் கூறினார்.

இன்றைய கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்க விழா நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேரடியாக இணையதளம் மூலம் ஒளிபரப்பப்பட்டது. மாணவ மாணவிகள் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.