சென்னை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கட்டப்பட்ட 8 கோடி 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் அமைக்கப்ப்டட வட்டாட்சியர் அலுவலகம், குடியிருப்புகள், அரியலூரில் கட்டப்பட்டள்ள சார் ஆட்சியர் குடியிருப்பு, சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
அத்துடன், நில அளவை, நிலவரி திட்ட இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் 8 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக 4 பேருக்கு நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு சட்டங்களை நடைமுறைப்படுத்த 38 மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்களை தமிழ்நாடு முழுவதும் அமைத்துள்ளது. இவற்றுள் 25 மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகின்றன. 2016–-17–ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் துறை மானியக்கோரிக்கையின் போது திருவண்ணாமலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சொந்தமாக புதிய மாவட்ட அலுவலகக் கட்டடம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

ரூ.2 கோடியில்

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், வேங்கிக்கால் கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன் 2 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.