சென்னை:

முதல்வர் எடப்பாடியின் அமெரிக்க பயணத்தால் தமிழகத்திற்கு ரூ. 2,780 கோடி அளவிலான தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க 14 நாள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். கடந்த 6 நாட்களாக  அமெரிக்காவில் முகாமிட்டு உள்ள எடப்பாடி,   அங்கு பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் கால்நடைப் பூங்கா, வேளாண்மைப்பூங்கா போன்ற வற்றை சுற்றிப் பார்த்து, அதுபோல தமிழகத்திலும் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வந்தார்.

அமெரிக்கா நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ” தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கல்வியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, சுகாதாரத் துறையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க 3.9.2019 அன்று அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்று, தமிழ்நாட்டில் தொழில் துவங்க அழைப்பு விடுத்தார்.

இக்கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே தமிழ் நாட்டில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்களான கேட்டர்பில்லர், ஃபோர்டு போன்ற நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் பிராங்க் விஸ்னர் அவர்களும் தமிழ்நாட்டில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து “தொழில் முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழ்நாடு” என்ற ஒரு காட்சித் தொகுப்பு திரையிடப்பட்டது.

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், நிதி சார்ந்த தொழில்நுட்ப முதலீடு களுக்கும், வாகன உற்பத்தித் தொழில்நுட்பத்தின் அடுத்த நிலையைப் பயன்படுத்த வாய்ப்புள்ள வானூர்தி, விண்கல  தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் உகந்த மாநிலம் தமிழ்நாடு என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு உகந்த சூழல் உள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு எடுத்து வரும் நடவடிக்கை களையும், முதலீடுகளுக்கு அரசு அளித்து வரும் ஊக்க உதவிகளையும், தடையற்ற மின்சாரமும், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளும், திறன்மிக்க மனித வளமும் தமிழ்நாட்டில் உள்ளது என்பதை எடுத்துக்கூறி, அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் Jean Martin, Aquil Systems, Scitus Pharma, Nurray Chemicals, Novitium Labs, Jogo Health, ST LNG, Saram 4, Emerson, Aspire Consulting, Revature-LLC, Zillion Technologies  உள்ளிட்ட16 நிறுவனங்கள் ரூபாய் 2,780 கோடி முதலீடு செய்து, தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டனர்.

இதைத் தவிர, , Haldia Petrochemicals நிறுவனம் , Naphtha Cracker Unit-உடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை முதற்கட்டமாக சுமார் 50,000 கோடி ரூபாய் அளவில் அமைக்க விருப்பம் தெரிவித்து, கொள்கை அளவிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க, Melissa Kessler, Mark Johnson, Kay and Lincoln, Warren Knapp, Manish Bhandari  போன்ற தொழில் பிரதிநிதிகளுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக ஆலோசித்தார்.

நியூயார்க்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக  முதலமைச்சர் அவர்கள் தெரிவித்து, தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீட்டாளர்களுக்கு அனைத்து வகையான ஆக்கமும், ஊக்கமும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அளிக்கும் என உறுதியளித்தார்.

மேலும், தொழில் வளத்தைத் தவிர, விவசாயம் சார்ந்த தொழில்களை, குறிப்பாக, வேளாண் பெருமக்களுடைய வருமானத்தை, கால்நடை மற்றும் பால்வள தொழில்களை மாண்புமிகுஅம்மாவின் அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் என தெரிவித்தார்கள்.

முதலமைச்சர் அவர்கள் தலைமையேற்று நடத்திய கூட்டத்தில் ரூபாய் 2,780 கோடி முதலீட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதோடு தமிழ்நாட்டில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் பயன் பெறுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.