நியூயார்க்:

மிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி, தமிழக அமைச்சர்களுடன் அமெரிக்க கால்நடை பண்ணையை சுற்றிப்பார்த்தார். அவர் மாட்டுப் பண்ணையை  பார்வையிடும் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து வரும் முதல்வர் தற்போது நியூயார்க் நகரில் முகாமிட்டு உள்ளார். அவருடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதய குமாரும் இணைந்துள்ளனர்.

இவர்கள் நியூயார்க் நகரில் உள்ள  பஃபல்லோ என்ற நகரில் உள்ள கால்நடைப் பூங்காவிற்கு விஜயம் செய்து, விவரங்கள் கேட்டறிந்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் விரைவில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப்பூங்காவிற்கு தேவைப்படும் தொழில் நுட்பங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்காக முதல்வர் அங்கு சென்றதாகவும், அங்குள்ள ஊழியர்களிடம் மாடு வளர்ப்பு, தீவனம் போன்றவை கள் குறித்து தெரிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து,  அமெரிக்க வாழ் தமிழ் தொழிலதிபர்களை சந்திக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும், அமெரிக்க தொழில் அதிபர்களையும் சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க முன்வருமாறு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளார்.