சென்னை

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் நடத்தும்  ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து விவாதிக்க உள்ளார்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலாக்கப்பட்டது.  அதன் பிறகு மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு தற்போதைய ஊரடங்கு நாளையுடன் (ஜூன் 30) முடிவடைய உள்ளது.  இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களான மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் போன்ற  மாநிலங்களில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாவதாக இருக்கும் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இன்று காலை 10 மணிக்குச் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.  அப்போது கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.  மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

சுகாதாரத்துறையின் அதிகாரிகளில் சிலர்,  “கொரோனா பரவுவதை ஊரடங்கால் கட்டுப்படுத்த முடியாது.  ஊரடங்கால் மக்கள் தான் பாதிப்பு அடைவார்கள்.   கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து நோயாளிகளைத்  தனிமைப்படுத்துவதைக் கடைப்பிடிக்கப் பல முறை அறிவுறுத்தி உள்ளோம்.

சென்ற முறையும் ஊரடங்கு தேவை இல்லை எனத் தெரிவித்தோம்.  ஆயினும் அரசியல் அழுத்தம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.   இனியாவது அமைச்சர்கள் சொல்வதை மட்டும் கேட்காமல் அதிகாரிகள் சொல்வதையும் கேட்டு முதல்வர் சரியான முடிவு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.