10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு  குறித்து இன்று தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை

த்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  அகில இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 29943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த சில நாட்களாகப் பாதிப்பு தினசரி 1500 ஐ தாண்டி வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு இந்த மாதம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த உள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பதால் தேர்வைத் தள்ளி வைக்க முடியுமா எனப் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட்டது.

இதையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதியம் 12 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கு பெறும் இக்கூட்டத்தில் தேர்வுகள் குறித்தும் பள்ளிகளைத் திறப்பது குறித்தும்  ஆலோசிக்கப்பட உள்ளது.