சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதாவை ஜெர்மன் தூதர் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஜெர்மனி உதவியுடன் தமிழ்நாட்டில சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி:

தமிழக முதல்வர் ஜெர்மன் தூதர் சந்திப்பு
தமிழக முதல்வர்  – ஜெர்மன் தூதர் சந்திப்பு

ஜெர்மன் நாட்டு இந்திய தூதர் மார்டின்நேய் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்று 2-வது தடவையாக முதல்-அமைச்சர் பதவியேற்றதற்காக வாழ்த்து தெரிவித்து கொண்டார்.
ஜெர்மனியின் கே.எப்.டபுள்யூ. வங்கியின் உதவியுடன் தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாகவும், கோவையில் அமைய உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு உதவி செய்ய விரும்புவதாகவும்,   இதற்காக தொழிலதிபர்கள்  கொண்ட குழு இன்று கோவையை சுற்றிப் பார்த்து  மேயர் மற்றும் அதிகாரிகளுடன் சந்தித்து இதுபற்றி விவாதிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இத்துடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்பாதை, மாநிலங்களுக்கு இடையிலான மின்பரிமாற்ற திட்டம், நகர கழிவுநீர் வசதி, போக்குவரத்து வசதி போன்றவற்றிற்கு உரிய உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் தருவதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் ஜெர்மனியின் கே.எப்.டிபிள்யூ. வங்கி பல்வேறு திட்டங்களுக்கு உதவி செய்து இருப்பதற்காக ஜெர்மனி அரசுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து கொண்டார்.
தமிழ்நாட்டில் ஜெர்மனி செய்யும் முதலீட்டிற்கு தமிழ்நாடு உரிய ஒத்துழைப்பை கொடுக்கும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு தொடர்ந்து ஜெர்மன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஜெர்மனி தூதருடன் தூதரக கவுன்சிலர் அன்னெட்டே, பொறுப்பு தூதர் உல்ப்காங்புல்லர், ஜெர்மன் மொழி பெயர்ப்பு நிபுணர் பிரியா ராமமூர்த்தி ஆகியோர் வந்திருந்தனர். மேலும் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன், முதன்மை செயலாளர் ஷிவதாஸ் மீனா ஆகியோரும் இதில் பங்கேற்றனர்