சென்னை:

மிழக தண்ணீர் பிரச்சினை என்று  ஊடகங்கள்தான் ஊதி பெரிதாக்குகின்றன என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். ஏற்கனவே அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று கூறிய நிலையில், தற்போது முதல்வரும் அதைத்தான் கூறுகிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்டான வழிகளை ஆலோசித்து, அதற்குரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். அது ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.

நமக்குக் கிடைக்க வேண்டிய பருவமழை போதிய அளவு பொழியாத காரணத்தினால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ, அங்கெல்லாம் மக்களுக்கு தேவையான குடிநீர் லாரிகள் மூலமாகத் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மக்களின் தேவையை கருத்தில்கொண்டு, அவர்களின் தேவைக்கேற்ப  குடிநீர் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

மேலும், அக்டோபர், நவம்பர் மாதத்தில் தான் பருவமழை தொடங்குவதால், அதுவரை இருக்கின்ற தண்ணீரை வைத்து சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதற்கேற்றாற்போல், இன்றைக்கு நிலத்தடி நீரை எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருப்பதாகவும், சில பகுதிகளில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலமும் போதிய அளவிற்கு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த தருணத்தில், பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர், இன்னும் , மூன்று, நான்கு மாதங்களுக்கு நிலத்தடி நீரை எடுத்துத் தான் மக்களுக்கு குடிநீராக வழங்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம், இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசின் இந்த செயலுக்கு, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் துணை நிற்க வேண்டும். ஏதோ வொரு இடத்தில் ஒரு பிரச்சினை என்றால் அதை பெரிதுபடுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு குடிநீர் பிரச்சினை இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை தயவுசெய்து ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் வெளியிட வேண்டாம் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன் என்று செய்தியாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

இயற்கை பொய்த்துப்போய் விட்டதால் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகள் எல்லாம் வறண்டு போய் விட்டன. நமக்குக் கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரில் 2 டிஎம்சி தான் கொடுத்தார்கள். இருந்தாலும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டு, வீராணம் ஏரியை நிரப்பி அதன்மூலமாக தண்ணீரைப் போதிய அளவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ அரசைப் பொறுத்தவரைக்கும், குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் அதனைத் தீர்த்து வைப்பதற்கு, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கு தேவையான நிதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.அரசு முறையாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார்.