ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வா? : தமிழக முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை

ரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்துவது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவுதலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.   அதன் பிறகு மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  அவ்வாறு தற்போது நடந்து வரும் தளர்வுகளுடன் கூடிய எட்டாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது.

இந்த தளர்வில் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.   இதனால் தற்போது மக்கள் நடமாட்டம் அதிகமாகி உள்ளது.  இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

அதனை தொடர்ந்து மதியம் மூன்று மணிக்கு மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடக்க  உள்ளது.   அப்போது அவர் ஊரடங்கு விதிகளில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசிக்க உள்ளார்.  அத்துடன் புற நகர் ரயில் சேவை தொடக்கம், கல்வி நிலையங்கள் திறப்பு, ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.