நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவம் படிக்க உள்ஒதுக்கீடு! எடப்பாடி தகவல்

சென்னை:

மிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு, மருத்துவ படிப்பில் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  விதி 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றனர். இதனிடையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை விதி எண் 110ன் கீழ் அறிவித்து வருகிறார்.

அதில்,  தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகத்துக்குப் பின் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று ஒப்புககொண்டுள்ளார்.

மேலும், இதன் காரணமாக, அரசு பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்வு எழுதி,  தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு அளிக்கும் வசையில் சிறப்பு சட்ட திருத்தம் கொண்டுவர இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதற்காக  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில்  ஆணையம் அமைக்கப்படும் என்று கூறியவர், அந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலம், சட்டம் ஆகிய துறைகளின் செயலாளர்களும், 2 கல்வியாளர்களும் இருப்பார்கள் என்றும் ,மருத்துவக் கல்வி இயக்குநர் இந்த ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆணையம் ஒரு மாதத்துக்குள் அரசுக்கு அளிக்கை அளிக்கும் என்றவர், அதன்பேரில் சிறப்பு சட்டதிருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஆனால், தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீட்டை வழங்க மேற்கொண்ட முயற்சி நீதித்துறையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.