துரை

தாம் காதலித்து மணம் முடித்த மனைவியை நீதிமன்றத்தில் முன்னிறுத்தக்  கோரி தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் மனு அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் என்னும் ஊரை சேர்ந்த சுரேந்திரன் சிங்கப்பூர் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.  சிங்கப்பூர் அணியில் மிகவும் புகழ்பெற்ற சுரேந்திரன்  காதல் திருமணம் செய்துள்ளார். தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் முன்னிறுத்த வேண்டும் என மனு ஒன்றை அளித்துள்ளார்.

சுரேந்திரன் தனது மனுவில், “ சிங்கப்பூர் நாட்டுக்காக நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன்.  தஞ்சாவூரைச் சேர்ந்த சினேகா என்பவரும் நானும் காதலித்து வந்தோம்.  சிநேகா குடும்பத்தினர் முதலில் எங்கள் திருமணத்துக்கு ஏதிர்ப்பு தெரிவித்து பிறகு சம்மதம் தெரிவித்தனர்..   ஆயினும் திடீரென சினேகாவுக்கு அவர் குடும்பத்தினர் வேறு மாப்பிள்ளை  பார்க்கத் தொடங்கினர்.

எனவே நானும் சினேகாவும் கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அன்று திருவோணம் செல்வ முருகன் கோவிலில் திருமணம் செய்துக் கொண்டு அதைச் சார்பதிவாளர் அலுவகல்த்தில் பதிவு செய்துள்ளோம்.  சினேகாவை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர்.  அவர்கள் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி செய்கின்றனர்.

சினேகா அதற்கு மறுப்பதால் அவரை ஆணவக் கொலை செய்யலாம் என அச்சம் எழுந்துள்ளன.  எனவே சினேகாவை கண்டுபிடிக்குமாறு பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ஹ்டேன்.  இதுவரை அவரை கண்டு பிடிக்கவில்லை என்பதால் சினேகாவை கண்டு பிடித்து நீதிமன்றத்தில் முன்னிறுத்த உத்தரவிடவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு மனு நீதிபதிகள் கல்யாண சுந்தரம் மற்றும் இளங்கோவன் ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்துள்ளது.  வழக்கை விசாரிக்கும் இந்த அமர்வு இந்த மனுவுக்குப் பதில் அளிக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.  மேலும் இந்த வழக்கு விசாரணை ஜனவரி 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.