சென்னை:

நாடு முழுவதும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது யார் என்று, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிமீது விசாரணை கல்லூரி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 13ந்தேதி சென்னை வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, அன்றைய தினம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதில் அளித்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி  குறித்து விசாரிக்க, கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி உத்தரவிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடத்த அனுமதித்தது எப்படி என்று விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மண்டல இணை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது யார் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக அரசு மற்றும் பாஜக அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மீது விசாரணை நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.