சென்னை

மிழக தீயணைப்பு துறையினர் விதிகளை மீறுவோரை தண்டிக்க உரிமை கோரி முதல்முறையாக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழக தீயணைப்பு துறை வீரர்கள் தீ விபத்து நேரங்களில் மட்டுமின்றி பல்வேறு இடர்களிலும் மக்களுக்கு பணி புரிந்து வருகின்றனர். வெள்ள நேரங்களில் இவர்களுடைய சேவைகளை பலரும் பாராட்டி உள்ளனர். பல நேரங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுவதால் இந்த துறையினர் பல நடவடிக்கைகள எடுத்து வருகின்றனர்.

அவ்வகை நடவடிக்கைகளில் ஒன்றாக ஒவ்வொரு கட்டிடங்களிலும் குறிப்பாக கல்வி நிலையங்களில் சோதனைகள் நடந்துள்ளன. இதில் சுமார் 90 இடங்களில் தீ விபத்து தடுப்பு விதிகள் பின்பற்றப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த துறைக்கு இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வளாகத்தின் வாயிலில் இது குறித்து அறிவிப்பு பலகை வைக்கவும் ரூ.500 அபராதம் விதிக்க மட்டுமே அதிகாரம் உண்டு

டில்லி தீயணைப்புத் துறையினருக்கு டில்லி தீயணைப்பு விதிகள் 2007 இன் படி அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் இவ்வாறு விதிமீறலுக்கு மூன்று முதல் ஆறு மாத சிறைதண்டனை மற்றும் ரூ. 50000 வரை அபராதம் விதிக்க முடியும். உத்திரப் பிரதேச மாநில சட்டப்படி 10 வருடம் வரை சிறைதண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும்.

இதை ஒட்டி தமிழக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர், “நாங்கள் விதிகளை பின்பற்றாமைக்கும் விதி மீறலுக்கும் நோட்டிசுகள் மட்டுமே அளிக்க முடியும். இந்த விதி மீறல் செய்பவர்கள் ரூ. 500 அபராதம் மற்றும் அறிவிப்பு பலகை குறித்து கண்டுக் கொள்வதில்லை. இதனால் மேலும் தண்டனை அளிக்க எங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.

இது குறித்து தி நகர்வாசிகள் நலச் சங்க செய்லர் கண்ணன் பாலசந்திரன், “சென்னை பெருநகர வளர்ச்சி சட்டத்தின்படி தீ விபத்து பாதுகாப்பும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் இந்த ஆணையத்தினர் வரைபடம் போல கட்டிடம் உள்ளதா என்பதை மட்டுமே கவனிக்கின்றனர். கட்டிடத்துக்கு தீயணைப்பு துறையிடம் இருந்து தடை இல்லா சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகும்.

ஆனால் பல நேரங்களில் ஊழல் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த சான்றிதழை வழங்கி விடுகின்றனர். அல்லது வேறு சில அதிகாரி இந்த சான்றிதழ் உள்ளதா என்பதை சோதிக்காமலே கட்டிடத்துக்கு அனுமதி வழங்கி விடுகிறார்கள். பல வணிக கட்டிடங்கள் இவ்வாறு தடை இல்லா சான்றிதழுடன் தி நகரில் அமைக்கபட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.