அரசு கவிழ்கிறது: திமுக, கூட்டணி எம்எல்ஏக்கள் ராஜினாமா?

சென்னை,

மிழகத்தில் நிலவி வரும் அரசியல் பரபரப்பான சூழ்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

இதன் காரணமாக எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட மோதலை தொடர்ந்து, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

சபாநாயகர் தனபாலின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை கூட்டி உள்ளது. மேலும், தமிழக அரசையும் ஆட்டம் காண வைத்துள்ளது.

18எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், தேவைப்பட்டால் காங்., திமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.

இந்நிலையில், சபாநாயகரின் அறிவிப்பு குறித்து, எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலை வருமான மு.க.ஸ்டாலின், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, நாளை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக உறுப்பினர்களிடம் இருந்து ராஜினாமா கடிதம் வாங்கப்படும் என தெரிகிறது.  மேலும் இதுகுறித்து காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினரிடமும் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், குட்கா விவகாரத்தில், சபாநாயகர், திமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு எடுத்தால் மேலும் சிக்கலாவிடும் என்பதால், தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தால் எடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்து விடும் என்று திமுக தலைமை யோசிப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய தமிழக அரசியல் சூழலில், எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற நிலையிலேயே நீடித்து வருகிறது.