பணியிழந்த ‘டாஸ்மாக்’ ஊழியர்களுக்கு ரேஷன் கடையில் வேலை! அரசு முடிவு!!

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் (பைல் படம்)

சென்னை,

மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, அதற்கு பதிலாக ரேஷன் கடைகளில் பணி  நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத, ‘டாஸ்மாக்’ ஊழியர்களை, ரேஷன் கடைகளில் நியமிக்கலாம் என்று முடி வெடுத்துள்ளதாக டாஸ்மாக் மேலாளர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து உச்சநீதி மன்றம்  மாநில மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது,  இதன் காரணமாக தமிழகத்தில் சுமார், 3,000 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

இதனால் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களின் பணி நிலைமை கேள்விக்குறியானது. அவர்களை வேறு கடைகளுக்கு பணி மாற்றம் செய்து வந்தனர். இருந்தாலும் அதிகமானோர் வேலை இல்லாமல் இருப்பதால், அவர்கள் மாற்றுப்பணி கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்து பல்வேறு வகையில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று  ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர், கிர்லோஷ் குமார் தலைமையில், அதன் மாவட்ட மேலா ளர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பணியிழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுபணி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி கூறியதாவது,

நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பணியிழந்த டாஸ்மாக் ஊழியர்களில்,  இளங்கலை பட்டம் பெற்றவர்கள்; ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்படாதவர்கள்; பல ஆண்டு பணிபுரிபவர்களை, விருப்பத்தின் அடிப்படையில், கூட்டுறவு சங்கம் மற்றும் அவை நடத்தும் ரேஷன் கடையில், விற்பனையாளர், எடையாளர்களாக நியமிக்க அரசு  முடிவு  செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக, அந்த விபரங்கள் அடங்கயி தனி படிவங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த படிவங்கள் மாவட்ட மேலாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

பணியிழந்த டாஸ்மாக் பணியாளர்கள் மேலாளர்களிடம் படிவங்களை வாங்கி நிரப்பி கொடுக்க வேண்டும். பின்னர் அதை பரிசீலித்து அவர்களை  ரேஷன் கடைக்கு மாற்றும் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.