முறைகேடான எடை, விலை குறித்து புகார் தெரிவிக்க தமிழக அரசு ’செயலி’ அறிமுகம்


கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் எடை குறைவாக இருந்தாலோ, கூடுதல் விலை வாங்கப்பட்டாலோ, இவை குறித்த முறைகேடுகளை பொதுமக்கள் புகார் அளிக்க, தமிழக அரசு செயலி ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. .

இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“விற்பனை செய்யப்படும் பொருட்களின் எடை சரியாக உள்ளதா, எடை போடும் எந்திரம் சரியாக இருக்கறதா என்பது குறித்து எடையளவு சட்ட விதிகளின் கீழ் மாதம்தோறும் சிறப்பு ஆய்வுகளை தொழிலாளர் துறையின் கீழ் உள்ள எடையளவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர் துறை ஆணையர் ரா.நந்தகோபால் உத்தரவின்படி, எடையளவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் கடந்த மே மாதம் தமிழகம் முழுவதும் 1,330 நகைக்கடைகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது, 289 நகைக்கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல, சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி நோட்டுப்புத்தகங்கள் விற்கப்படும் கடைகளிலும், ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்களிலும் அதிகாரிகளால் ஆய்வு நடத்தினர்.

இதில், 856 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 46 முரண்பாடுகள் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுபோன்ற சிறப்பு ஆய்வுகள் இனி வரும் மாதங்களிலும் தொடர்ந்து நடைபெறும்.

பொட்டலப் பொருட்களின் மீது சட்ட ரீதியான அறிவிப்புகள் இல்லாதது, அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு மேல், அதிக விலைக்கு விற்பனை செய்வது, விற்பனை செய்யப்படும் பொருட்களின் அளவு குறைவாக காணப்படுவது போன்ற முரண்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் செய்யலாம்.

இதற்காக தமிழக அரசின் தொழிலாளர் துறையினால், TN-LMCTS என்ற செயலி (ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed