Random image

தமிழகஅரசின் முயற்சி தோல்வி? முக்கொம்பு உடைந்த அணையில் ராணுவ குழுவினர் ஆய்வு

திருச்சி:

கொள்ளிடம்  அணையில் இருந்து வெளியேறிய நீரினால் முக்கொம்பு மேலணையின் கதவுகள் உடைந்து நொறுங்கியது. இதன காரணமாக தண்ணீர் அணைத்தும் வீணானது. இது பெரும் பரபரப்பையும், கண்டனங்களையும் எழுப்பியது.

இந்த நிலையில் அணையின் உடைந்த பகுதிகள் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறி வந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து ராணுவ குழுவினர் வந்து உடைந்த அணை குறித்து ஆய்வு செய்தனர். தமிழக அரசின் முயற்சி தோல்வி அடைந்ததாலேயே ராணுவத்தினர் வந்து ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.  இது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கொம்பு உடைந்த அணையை ஆய்வு செய்யும் ராணுவத்தினர்

திருச்சி மாவட்டம், முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணையில் வெள்ளம் காரணமாக முக்கொம்பில் உள்ள மேலணையின் மதகுகள் கடந்த ஆகஸ்டு மாதம் 22ந்தேதி உடைந்தன. முதலில் ஒன்று இரண்டாக உடைந்த மதகுகள் பின்னர் அதிகரித்தன. தொடர்ந்து அணையின் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் 8 தூண்க ளும் 9 மதகுகளும் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக தண்ணீர் அனைத்தும் வீணானது.

இதையடுத்து உடைந்த அணைப்பகுதியை  மணல் மூட்டைகள், பாறாங்கற்களைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீணாக ஆற்றில் செல்லும் இடத்தில் பாறாங்கற்களை போட்டு அடைத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  நேற்று முன்தினம் முக்கொம்பில் ஆய்வு செய்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  அணையின் சீரமைப்பு பணிகள் 40 சதவீதம் கூட முடியவில்லை எனவும், இதுகுறித்து ராணுவத்தினரை அழைத்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால், தமிழக அரசோ, உடைந்த அணைப்பகுதி தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து கூறி வந்தது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு ராணுவ பயிற்சி முகாமில் இருந்து என்ஜினீயர் மேஜர் அரவிந்த் தலைமையில் ஹவில்தார்கள் நாகராஜ், தினேஷ் உள்பட 4 பேர் கொண்ட குழுவினர் முக்கொம்பு மேலணைக்கு வந்து ஆய்வு செய்தனர். அவர்களுடன் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அணையில் இறங்கி உடைந்த மதகுகள் பகுதியையும், அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளையும், இரும்பு குழாய்கள் தண்ணீரில் பொருத்தப்படுவதையும் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் மேல் பகுதியில் உள்ள பாலத்தில் ஏறி நின்றும் பார்வையிட்ட அவர்கள் தாங்கள் வைத்திருந்த தொலைநோக்கி கருவி மற்றும் நவீன தொழில்நுட்ப கருவி மூலம் அணையில் உடைந்த மதகுகள் பகுதியை அளவீடு செய்தனர். சீரமைப்பு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

தமிழக அரசோ உடைந்த அணைப்பகுதி தற்காலிகமாக செய்யப்பட்டதாகவும், புதிய அணை விரைவில் கட்டப்படும் என்று கூறி வந்த நிலையில், ராணுவ குழுவினர் வந்து ஆய்வு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசின் புகுழு மூட்டை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த ஆய்வை தொடர்ந்து ராணுவம் சீரமைப்பு பணியை மேற்கொள்ளும் என பரவலாக பேசப்படுகிறது.

ஆனால், அனையின்  சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளின் படி ராணுவ குழுவினர் அணையில் சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். பணிகள் முழுவதும் திருப்திகரமாக இருப்பதாக  தெரிவித்தாக கூறினார்.

Credit: The week