சென்னை :
நடந்து செல்ல வேண்டாம் வெளிமாநில தொழிலாளர்களே.. ஒருநாளைக்கு 10ஆயிரம் பேரை, உங்களின்  சொந்த ஊருக்கு அரசு செலவில்  அனுப்பி வைக்கிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே  தமிழகத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது தினசரி 10ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுவதாக கூறி உள்ளார்.
கொரோனா ஊரடங்கு 45 நாட்களை தொடர்ந்து நீடித்து வருவதால், பணி  காரணமாக வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு வந்த லட்சக்கணக்கான  புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஒருவேளை உணவுக்கே வழியின்றி தவித்து வரும் நிலையில், பலர் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்துசென்று கொண்டிருக்கின்றனர். மேலும் பலர், தங்களை, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்காக    மே 1ம் தேதியிலிருந்து ஒவ்வொரு மாநிலங்களில் இருந்து  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,  புலம் பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருப்பதுடன்,   இதுவரை தமிழகத்தல் இருந்து 55,473 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த  மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும்,  சிறப்பு ஏற்பாடுகள் மூலம் ஒரு நாளைக்கு 10,000 தொழிலாளர்களை அனுப்ப டி.என் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அனைத்து பயண செலவு களையும் மாநில அரசு ஏற்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.