சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் பலர், அதில் பணத்தை இழந்து பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

ஆகையால் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வந்தன. சென்னை உயர்நீதி மன்றமும் இந்த விளையாட்டை தடை செய்வது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்தின் படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டை வைத்திருந்தால் 10,000 ரூபாய் அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

விளையாடுவோரின் கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் வேறு ஏதேனும் இருந்தாலும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.