தமிழகஅரசின் வற்புறுத்தலால் தர்மபுரி பஸ் எரிப்பு கைதிகள் விடுதலை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்

சென்னை:

ர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு கைதிகளை விடுதலை செய்வதில் தனக்கு திருப்தி இல்லை என்றும், அரசின்  வற்புறுத்தலுக்காகவே அவர்கள் விடுதலைக்கு அனுமதி அளித்ததாக  ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் தெரிவித்து உள்ளார்.

ர்மபுரி வேளாண்மை கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரோடு பேருந்தில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட அதிமுகவினர் 3 பேரும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த விடுதலை சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து ஆளுநர் மாளிகை விரிவான விளக்கம் அளித்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின்  நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.  அதன்படி சுமார் 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, சிறிது சிறிதாக விடுதலை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தர்மபுரி வேளாண்மை கல்லூரி  பஸ் எரிப்பின்போது 3 கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, ஆயுள் தண்டனை பெற்ற அதிமுக  பிரமுகர்கள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரையும் விடுதலை செய்ய அரசு முடிவு செய்தது.

இதுகுறித்து கோப்புகள் தயார் செய்யப்பட்டு, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது. இந்த கோப்புகளை ஆய்வு செய்த கவர்னர்,  அவர்களை விடுவிக்க மறுத்து கோப்புகளை திருப்பி அனுப்பினார். இவ்வாறு இரண்டு முறை திருப்பி அனுப்பிய நிலையில், 3வது முறையாக கடந்த 12ந்தேதி மீண்டும் தமிழக அரசு 3 பேர் விடுதலைக்கு அனுமதி அளிக்க வற்புறுத்தி கோப்புகளை அனுப்பியது.

அதைத்தொடர்ந்து  கோப்புகளை ஆய்வு செய்த கவர்னர், 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து மூவரும் நேற்று வேலூர் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

அதிமுகவினர் 3 பேர் விடுதலை செய்யப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து  ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது.

அதில்,  குற்றவாளிகள் 3 பேரும் விடுதலை செய்வதில் தனக்கு திருப்தி இல்லை என்றும், ஆனால், தமிழக அரசு மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால்தான் அதற்கான கோப்பில் கையெழுத்திட்ட தாக கூறப்பட்டு உள்ளது. மேலும், அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின்படி 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதும் என்று தெரிவித்துள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறும் கைதிகளை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ள நிலையில்,  குற்றவாளிகள் 3 பேரும் 13 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவர்னரின் இந்த விளக்கம் ஆட்சியாளர்கள் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.