ஆளுநர் ஆய்வு செய்வது தொடரும் : ஆளுநர் மாளிகை அறிவிப்பு

சென்னை

பொதுமக்கள் நலனை ஒட்டி ஆய்வுகள் இனியும் தொடரும் என தமிழக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்கிறார்.  அப்போது அவர் அரசு அதிகாரிகளுடன் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கிறார்.    அவரது இந்தப் பயணத்துக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சமீபத்தில் நாமக்கல்லில் ஆய்வு செய்யச் சென்ற ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டி திமுகவினர் போராட்டம் நடத்தினர்,   அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.   நேற்று ஆளுநரின் ஆய்வையும் திமுகவினர் கைதையும் எதிர்த்து ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடந்தது.    அதை ஒட்டி ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.  அந்த அறிக்கையில், ”ஆளுநருக்கு மாநிலத்தில் இந்த பகுதிக்கும் சென்று திட்டங்களை பார்வை இடவும் ஆய்வு நடத்தவும் முழு அதிகாரம் உண்டு.   தனது ஆய்வுப் பயணத்திலன் போது ஆளுநர் எந்தத் துறை குறித்தும் விமர்சிக்கவில்லை.   அதனால் பொது மக்கள் நலன் கருதி ஆளுநரின் மாவட்ட ரீதியான ஆய்வுகள் இனியும் தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.