சென்னை

மிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள 484 உள்ளாட்சி சாலைகள் மேம்பாட்டுப் பணிக்காக அரசு ரூ.895 கோடி ஒதுக்கி உள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 66 ஆயிரம் கி.மீ நீளச் சாலைகள் உள்ளது.  இச்சாலைகள் தேசிய, மாநில, மாவட்ட முக்கிய, மாவட்ட இதர சாலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.   இது இந்த சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் மாநகர, நகர்ப்புற பகுதிகளில் ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் உள்ள சாலைகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அந்த சாலைகள் மாவட்ட இதர சாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரம் ஊராட்சி சாலைகள் மாவட்ட இதர சாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 524 பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1362 கி.மீ நீளம் கொண்ட சாலை மாவட்ட இதர சாலைகளாக 1024 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது

அதில் தற்போது 484 பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு உட்பட 1267 கி.மீ நீள சாலைகள் 895.48 கோடி தரம் உயர்த்தப்பட உள்ளன.

இதில் காஞ்சிபுரத்தில் 41 கோடியில் 23 சாலைகள், திருவள்ளூரில் 30 கோடியில் 15 சாலைகள், கடலூரில் 23 கோடியில் 12 சாலைகள், திருவண்ணாமலையில்  38 கோடியில் 17 சாலைகள், சேலத்தில் 48 கோடியில்  36 சாலைகள், தர்மபுரியில் 53 கோடியில் 33 சாலைகள், ஈரோட்டில் 52 கோடி செலவில் 25 சாலைகள், கோவையில் 59 கோடியில் 21 சாலைகள் புதுக்கோட்டையில் 52 கோடியில் 25 சாலைகள், தஞ்சாவூரில் 36 கோடியில் 25 சாலைகள், நாகை 48 கோடியில் 20 சாலைகள், மதுரையில் 33 கோடியில் 27 சாலைகள், ராமநாதபுரத்தில் 56 கோடியில் 29 சாலைகள், விருதுநகரில் 28 கோடியில் 23 சாலைகள், சிவகங்கையில் 62 கோடியில் 39 சாலைகள் என மொத்தம் 27 மாவட்டங்களில் 895 கோடியில் பணிகள் நடக்க உள்ளன

இந்த பணிகள் நபார்டு வங்கி நிதியுதவியுடன்  மேற்கொள்ளப்படுகின்றன.   இந்த பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அடுத்த ஆண்டு முதல் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படுகிறது. அதையொட்டி நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவு தலைமை பொறியாளரின் கீழ் நான்கு வட்டங்கள் மற்றும் 14 கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.