டெல்லி:
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.2ஆயிரம் கோடி நிதி தேவை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தின்போது கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், மத்திய அரசோ, தமிழத்துக்கு  வெறும் ரூ.335 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது. நாடு முழுவதும் 14 மாநிலங்களுக்கு மொத்தமாகவே ரூ. 6,195 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த  ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர், பிரதமரிடம்
கொரானா தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே கேட்ட ரூபாய் 2000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1000 கோடியை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என மொத்த  மொத்தம் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில் நேற்று இரவு  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், கேரளா உள்பட 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு மொத்தம் ரூ. 6,195 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.
அதன்படி,  கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  கேரளாவுக்கு பல முறை போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், இந்த முறை அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பஞ்சாப்புக்கு ரூ.638 கோடி,
மேற்கு வங்கத்திற்கு ரூ.417.75 கோடி
தமிழகத்துக்கு 335.41 கோடி 
குறைந்தபட்சமாக மேகாலயாவிற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள  டிவிட்டில்,
‘கொரோனா நெருக்கடியில் இருக்கும் மாநில அரசுகளுக்கு உதவும் வகையில், 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி, 2வது தவணையாக, 14 மாநிலங்களுக்கு ரூ .6,195.08 கோடி வழங்கப்பட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.