சென்னை

புதிய பாட தொகுப்புக்கு அனுமதி பெறாமல் 11 ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கக் கூடாது எனத் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது நடைபெற இருந்த 10ஆம் வகுப்புத் தேர்வைத் தமிழக அரசு ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது.   அனைவரும் தேர்ச்சி என்றாலும் மாணவர்களின் காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண் மற்றும் பள்ளி வருகையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உள்ளன.  இந்த முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

ஆனால் தமிழகத்தில் பல பள்ளிகள் 11 ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையில் ஆர்வம் காட்டி வருகின்றன.   ஒரு சில பள்ளி நிர்வாகம் இது குறித்து மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தைகளை  தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.   இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்குப் புகார்கள் வருகின்றன.

ஏற்கனவே 11 ஆம் வகுப்பில் அமலிலுள்ள 600 மதிப்பெண்களுக்கான பாடத்தொகுப்புக்குப் பதில் புதிய பாடத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இந்த புதிய பாடத் தொகுப்பு 500 மதிப்பெண்கள் கொண்டதாகும்.  இந்த புதிய தொகுப்பின் கீழ் அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக் குடாது எனவும் அவ்வாறு நடந்துக் கொள்ளும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.