அமெரிக்க சரவதேச பள்ளிக்கு தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை

அரசின் அங்கீகாரத்தைப் பெறாவிடில் அமெரிக்க சர்வதேச பள்ளி மூடும் நிலை  உண்டாகும் எனத் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

சென்னையில் அமெரிக்க சர்வதேச பள்ளி என்னும் பெயரில் இயங்கி வரும்  பள்ளி சர்வதேச பாடத் திட்டத்தைப் பின்பற்றுகிறது. இந்த பள்ளி இந்தியப் பாடத் திட்டம் எதையும் பின்பற்றாததால் அரசிடம் பதிவு மட்டும் செய்துள்ளது. அரசின் அங்கீகாரத்தை இப்பள்ளி பெறவில்லை. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை, உள்ளூர் பணியாளர், மற்றும் வருமான சட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை எனப் புகார் எழுந்தது.

இந்த புகாரின் மீதான விசாரணை சென்னையில் தலைமை கல்வி  அலுவலர் தலைமையில் நடந்தது. இந்த விசாரணையை நடத்திய தலைமை கல்வி அதிகாரி திருவளர்செல்வி இந்த பள்ளிக்கு நோட்டிஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். மே மாதம் அனுப்பப்பட்ட அந்த நோட்டிசில் இந்த பள்ளி தமிழக அரசின் குழந்தைகள் கல்வி உரிமை மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் இந்த பள்ளி இன்னும் 15 நாட்களுக்குள் அங்கீகாரம் பெற வேண்டும் என அறிவித்துள்ளது.

இதற்குப் பதில் அளித்த பள்ளி நிர்வாகம் இந்த நோட்டிசுக்கு இடைக்காலத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடியது. கல்வித்துறை இந்தப் பள்ளி சுமார் 20 வருடங்களுக்கு மேலாக 800 மாணவர்களுடன் நடந்து வருவதாகவும் இது வரை ஒரு முறை கூட ஆய்வு நடத்தப்படவில்லை எனவும் இதனால் இந்த பள்ளியில்  தீயணைப்பு, பாதுகாப்பு, கட்டிடத் திறன், சுகாதாரம் உள்ளிட்ட எதைப்பற்றியும் துறைக்குத் தெரியாது எனவும் குறிப்பிட்டது. எனவே இந்தப் பள்ளி உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும் இல்லையெனில் பள்ளி மூடப்படும் எனவும் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இதற்கு பதில் அளித்து பள்ளி நிர்வாகம் நீதி மன்றத்துக்கு அளித்த பிரமாணத்தில் “எங்கள் பள்ளி கடந்த 1995 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. இந்த பள்ளி இந்தியாவில்  வசிக்கும் அமெரிக்கக் குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. எனவே இந்த பள்ளிக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வராது. இதற்கான தடையில்லா சான்றிதழை மனித வள அமைச்சகம் அளித்துள்ளது. அத்துடன் இந்த பள்ளிக்கான நிலத்தைத் தமிழக அரசு எங்கள் பள்ளிக்குக் குத்தகைக்கு அளித்துள்ளது. அப்போதும் அங்கிகாரம் பற்றி அரசு எந்த ஒரு சந்தேகமும் எழுப்பவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.