துரை

பாஜகவுக்கு யார் அடி பணிவது என்பதில் தமிழக அரசு முதல் இடத்தில் உள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

தமிழக அரசு மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.    குறிப்பாகக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் பாஜக ஆளாத மாநிலமான தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.  இது நாடெங்கும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.

இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர், “சென்ற வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பிரமுகர் ஒருவர் பெண் வாக்காளர்களை அத்துமீறி அழைத்துச் சென்று அவர்களது வாக்குகளை வாக்குப் பெட்டியில் போட்டுள்ளார். இந்நிகழ்வு வீடியோவாக வெளியாகி உள்ளது. இத்தகைய சம்பவம் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே இதுபோல் முறைகேடுகள் நடக்கும் என்று திமுக குற்றம் சாட்டி உள்ளது.  ஆகவே வாக்கு எண்ணும்போது எவ்வித முறைகேடும் நடந்துவிடக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில்  நிச்சயமாக வெற்றி பெறும் நிலையில் உள்ளது.   ஆனால் தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு  அடிபணிவதில் தமிழக அரசு முதலிடம் வகிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.