சென்னை

மிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் நாடெங்கும் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது.  அதன் பிறகு கொரோனா பரவல் குறையவே ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.  அதன் பிறகு ஒவ்வொரு மாநிலமும் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கு விதிகளை மாற்றி அமைத்து வருகிறது.

மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.  குறிப்பாகச் சென்னை, கோவை, தஞ்சை, உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி இன்றுடன் முடிவடையும் ஊரடங்கில் தமிழக அரசு ஏதும் மாற்றம் அறிவிக்கலாம் என எதிர்பார்ப்பு இருந்தது.

இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில். “கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏப்.30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  அந்தந்த மாவட்ட சூழலுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் விதித்துக் கொள்ளலாம்

ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்த விமானப் பயணங்கள் தவிர மற்ற அனைத்து சர்வதேச விமானப் பயணங்களுக்கும் தடை நீடிக்கும்.   அத்துடன், கரோனா பரிசோதனை – கண்காணிப்பு – சிகிச்சை தொடர வேண்டும்,

நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கெனவே வகுத்து அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.   அதாவது 1977 ஜனவரி 1க்கு முன்பு பிறந்த அனைவருக்கும் நோய் பாதிப்பு இல்லாவிடினும் தடுப்பூசி போடப்படும். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.