சென்னை

வேலூர் சி எம் சி மருத்துவக் கல்லூரிக்கு  மாணவர் சேர்ப்பு விதிகளில் இருந்து தமிழக சுகாதாரத்துறை விலக்கு அளித்துள்ளது/

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மதிப்பெண்களைப் பொறுத்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கும் நீட் மதிப்பெண் அவசியம் ஆகும். எந்த ஒரு மருத்துவக் கல்லூரியும் இதனை மீறி மாணவர் சேர்க்கை நடத்த முடியாது என்பது விதியாகும்.

தமிழகத்தை பொறுத்த வரை நீட் மதிப்பெண்களுடன் 69% இட ஒதுக்கீட்டு முறையும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள தனியார்க் கல்லூரிகளில் 35-50% இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாக அளிக்கப்படுகின்றன.

வேலூரில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான கிறிஸ்டியன் காலேஜ் மருத்துவமனை கல்லூரியில் (சிஎம்சி) இந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை என பலரும் குற்றச்சாட்டுக்கள் கூறுகின்றனர்.  . நீட் மற்றும் அரசு இட ஒதுக்கீடுக்காக எந்த ஒரு இடமும் ஒதுக்கப்படாமல் அனைத்து இடங்களும் நிர்வாக இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அளிக்கப்படுவதாக குற்றசாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில் தமிழக அரசு சுகாதாரத் துறை வேலூர் சிஎம்சி கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை விதிகளில் இருந்து முழுமையாக விலக்கு அளித்துள்ளது. அதன்படி அதிக அளவில் மதிப்பெண் பெற்ற 12 மாணவர்கள் நேரடியாக சேர்க்கப்பட உள்ளனர். தலித்துகளுக்கு 2 இடங்களும், பழங்குடியினருக்கு 1 இடமும் ஒதுக்கப்பட உள்ளன. மத்திய அரசுக்காக ஒரு இடமும் சிஎம்சி ஊழியர்கள் குழந்தைகளுக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட உள்ளன.

மீதமுள்ள 74 இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டாக அறிவிக்கப்பட உள்ளன. இந்த இடங்கள் இந்தியா முழுவதுமுள்ள கிறித்துவ மிஷனரிகளால் பரிந்துரை செய்யப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் வேலூர் சிஎம்சி கல்லூரி அதிகாரி ஒருவர் தாங்கள் எங்கள் மிஷனரிகளின் பரிந்துரையை மட்டும் கருத்தில் கொள்வோம் என கடந்த வருடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பெற்றோர்களில் ஒருவரான ரமேஷ் என்பவர், “மற்ற கல்லூரிகளை விட இங்கு கட்டணம் குறைவு என்பதால் இங்கு சேர மாணவர்கள் விரும்புகின்றனர். அது மட்டுமின்றி பல இனங்களிலும் இந்த கல்லூரி சிறந்த கல்லூரி என்பதும் இங்கு பல மாணவர்கள் சேர காரணமாக உள்ளது. ஆனால் வெறும் 12 இடங்கள் மட்டுமே அளிக்கப்படும் என்பதால் நீட் தேர்வில் 625 மதிப்பெண் பெற்றிருந்தாலும் இங்கு இடம் கிடைக்காது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.