தமிழகத்தில் நவம்பர் 25 முதல் கலாச்சார நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி

சென்னை

மிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் 200 பேர்களுடன் கலாச்சார நிகழ்வு நடத்த அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.   அவ்வகையில் மதம், சமூகம், அரசியல் உள்ளிட்டவை குறித்த கூடங்களுக்கு 100 பேர்களுடன் நடக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.   இந்நிலையில் விழாக்காலத்தை முன்னிட்டு அதிக கூட்டம் கூடி கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்பதால் இந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதையொட்டி பலதரப்பட்ட மக்களும் கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி கோரி அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.  குறிப்பாக டிசம்பர் மாதத்தில் சங்கீத விழாக்கள் நடைபெறும் என்பதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதையொட்டி தமிழக ரசு வரும் நவம்பர் 25 முதல் தமிழகத்தில் கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்கி உள்ளது.  அத்துடன் இது குறித்துப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் இந்த நிகழ்வுகள் கூடிய வரை திறந்த வெளியில் நடைபெற வேண்டும்.   மூடிய அரங்குகள் எனில் அரங்கின் கொள்ளளவில் பாதிப் பேர் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும்.  மூடிய அரங்கு மற்றும் திறந்த வெளி அரங்கு ஆகிய இரு இடங்களிலும் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும்.

விழாக்களில் கலந்துக் கொள்வோர் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை அவசியம் கண்டுபிடிக்க வேண்டும்.   அரங்கில் தெர்மல் ஸ்கேனிங் மற்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக இந்த நிகழ்வுகள் அனைத்தும் சென்னை மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பிறகே நடக்க வேண்டும்.