‘வெற்றிவேல் யாத்திரைக்கு’ அனுமதி கிடையாது! உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு தகவல்!

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சி நாளை (6ந்தேதி) வேல் யாத்திரை தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆஜரான தமிழகஅரசு வழக்கறிஞர், பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ அனுமதி அளிக்கும் திட்டம் கிடையாதுஎன்று உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பாஜகவின் வேல்யாத்திரைக்கு தமிழகஅரசு தடை விதிப்பது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசம் இழிப்படுத்தப்பட்டத்தை தொடர்ந்து மதரீதியிலான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அடுத்த ஆண்டுநடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை குறிவைத்து, தமிழக பாஜக வேல்யாத்திரை என்ற பெயரில் தமிழக முழுவதும் பாஜகவை வளர்க்கும் நோக்கில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டது. அதன்படி,  வேல்யாத்திரை 6ந்தேதி திருத்தணியில் இருந்து புறப்பட்டு டிசம்பர் 6ந்தேதி திருச்செந்தூர்  முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.

இந்த வேல் யாத்திரையை தடைசெய்ய வேண்டுமென தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதன் காரணமாக மதக்கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயல்வராக விசிக தலைவர் திருமாவளவனும் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து,  வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மனு  தாக்கல்  செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழகஅரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், தமிழகம் முழுவதும் பாஜக திட்டமிட்டுள்ள வெற்றிவேல் யாத்திரைக்கான அனுமதியை நிராகரிக்க  தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக  தெரிவித்தார். அதுதொடர்பான உத்தரவு இடன்று  இன்று தமிழக பாஜக அலுவலக பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், தமிழகத்தில் கொரோனா 2வது மற்றும் 3வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.