சென்ன‍ை: கொரோனா சிகிச்சைக்கான Tocilizumab என்ற மருந்தை, அமெரிக்காவிலிருந்து 1000 யூனிட்டுகள் வரை வாங்குவதற்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கிய தனது தந்தையைக் காப்பதற்காக, ஜோயல் பின்டோ என்ற சென்னை நபர், மிகவும் கடினப்பட்டு ஐதராபாத் வரை டிரைவிங் செய்து இந்த மருந்தை வாங்கி வந்த சம்பவம் சிலருக்கு நினைவிருக்கலாம்.

காப்புரிமை பெறப்பட்ட இந்த மருந்தின் விலை ரூ.92000. இந்த மருந்துக்கு சென்னையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு இதுவரை 300 யூனிட் வரை இந்த Tocilizumab மருந்து வந்துள்ளது.

முன்பு இந்த மருந்து ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. ஆனால், தற்போது இது ‍அமெரிக்காவில் மட்டுமே தயாரிக்கப்படுவதாய் கூறப்படுகிறது. எனவே, அமெரிக்காவிலிருந்து வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குப் பொருத்தமானதா? என்ற சோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், cytokine storms அறிகுறியுள்ள தீவிர கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.