பட்டாசு வெடிக்க மேலும் 2 மணி நேரம் அனுமதி: தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு

சென்னை:

ட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

அதில், காலை 4 மணி முதல் 6 மணி வரை மேலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உள்ளது.

நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை,  உச்சநீதி மன்ற  நீதிபதிகள் ஏ கே சிக்ரி மற்றும் அசோக்பூஷன் ஆகியோர் அமர்வு விசாரித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி,  நாடு முழுதும் பட்டாசு தயாரிக்கவும்,  வெடிக்கவும் தடை விதிக்க முடியாது என்று என்று கூறி உள்ள உச்சநீதி மன்றம் பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

அதன்படி தீபாவளி அன்று இரவு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும், என்றும்,  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று இரவு 11.55 முதல் 12.30 மணி வரை மட்டுமே அனுமதி அளித்தும் உத்தரவிட்டது.

இது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. விசேஷ நாட்களில்  பட்டாசு வெடிக்க கடுமையான நிபந்தனைகள் விதித்து அனுமதி அளித்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் சிவகாசி மற்றும் விருதுநகர் பகுதிகள் மற்றும் நாடு முழுவதும் பட்டாசு தொழிலில் ஈடுபடுவோர், உச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக லட்சகணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும்,  ஒரே ஒரு  நாள் மட்டும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடையாது என்று கூறி தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது. அதில், பட்டாசு வெடிக்க மேலும் 2  மணி நேரம் அனுமதி கோரி உள்ளது. தீபாவளி அன்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளது.