சென்னை: கொரோனா பரவலை தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும்  இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ளதால், தியேட்டர்களுக்கு பேரிழப்பு ஏற்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர்  திருப்பூர் சுப்ரமணியன் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், தியேட்டர்கள் முழுமையாக மூடப்பட்டன. சுமார் 8 மாதங்களுக்கு பிறகே நவம்பர் 10ந்தேதி 50 சதவிகித பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் தளர்வுகள் அதிகரிப்பு காரணமாக தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்பட்டன. இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் தியேட்டர்களுக்கு செல்ல விரும்பாத நிலையே ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது,  மீண்டும்  தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு,  ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் தியேட்டர்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து  தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாவது,

கடந்த ஆண்டு ஊரடங்கின் போது திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியாமல் இதுவரை மொத்தம் 112 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாகத் தான் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு மெல்ல இயல்பு திரும்புகிறது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு 50 சதவீத இருக்கைதான் அனுமதி என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

தற்போது தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் எங்களால் இரவு காட்சிகளை திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓரளவு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமையும் திரையரங்குகளை திறக்க முடியாது. இந்த அறிவிப்பால் திரையரங்குகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படும். 300க்கும் அதிகமான திரையரங்குகள் மூடப்படும் நிலை ஏற்படும்.

இது குறித்து நாளை முக்கிய ஆலோசனையை திரையரங்க உரிமையாளர்கள் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.