சென்னை:

மிழக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்று சமையலுக்கு தேவையான பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், பருப்புகளின் விலை உயர்ந்ததால், உளுத்தம் பருப்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக மசூர் பருப்பு வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு அதை வழங்கி வந்தது.

இந்நிலையில்,  மசூர் பருப்பில் நச்சுத்தன்மை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மசூர் பருப்பு உபயோகப்படுத்துவதால்,  குழந்தைகளுக்கு முடக்கு வாதம் போன்ற  நரம்புக்கோளாறுகள்  ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து. தமிழ்நாட்டில் மசூர் பருப்புக்குத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர், ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய வேண்டியது இருப்பதால், நச்சுத்தன்மை என்று தெரிந்தும்,  கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் மசூர் பருப்பு கொள்முதலுக்கான டெண்டரை உணவுத்துறை வெளியிட்டு, ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசூர் பருப்பு நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், அதை தடை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொது நல  வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து மசூர் பருப்பு கொள்முதலுக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் இன்றளவும் மசூர் பருப்பு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து விநியோகம் செய்வதை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.