ஐடி ரெய்டு எதிரொலி : சத்துணவு முட்டை டெண்டர்கள் நிராகரிப்பு

சென்னை

த்துணவுக்கான முட்டையை அளிக்க அரசு அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளையும் நிராகரித்தது.

தமிழ்நாட்டில் சத்துணவுக்காக ஆண்டுக்கு சுமார் 95 கோடி முட்டைகள் தமிழக அரசால் வாங்கப்படுகின்றன.   இதற்காக அரசு ரூ.500 கோடி செலவிடுகிறது.   இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரி தமிழக அரசின் சமூகநலத்துறை விளம்பரம் அளித்திருந்தது.  அதில் 6 நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்திருந்தன.

இவற்றில் 3 நிறுவனங்கள் தற்போது வருமான வரிச் சோதனைக்கு உள்ளான கிறிஸ்டி குழுமத்தை சேர்ந்தவைகள் ஆகும்.   இந்த சோதனையின் போது இந்த குழுமத்திடம் இருந்து வரி மோசடி மற்றும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி ஆகியவை நடந்ததற்கான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கண்டு பிடித்ததாக கூறப்படுகிறது.

அதை ஒட்டி கிறிஸ்டி குழுமத்தின் ஒப்பந்தப் புள்ளிகளை ஏற்கக் கூடாது என மற்ற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.    அதனால் இந்த ஒப்பந்த புள்ளிகளை முடிவு செய்வதில் தாமதம் உண்டாகியது.   மேலும் இந்த 6 நிறுவனங்களில் கிறிஸ்டி கிஷான், நேச்சுரல் ஃபுட் மற்றும் ஸ்வர்ணபூமி ஆகிய 3 நிறுவனங்களும் கிறிஸ்டி குழுமத்தை சேர்ந்தவைகள் ஆகும்.

இந்த நிறுவனங்கள் அனைத்துமே வருமான வரி சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது.  இதை ஒட்டி சமூக நலத் துறை அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் நிராகரித்துள்ளது.   இது பற்றி மேலும் விவரங்கள் ஏதும் அந்தத் துறை தெரிவிக்கவில்லை.