ஓய்வுபெறும் வயதை 59ஆக உயர்த்தியது தொடர்பான வழக்கு… உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை

மதுரை:

ரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் ஓய்வு பெரும் வயதை 59 – ஆக உயர்த்திய தமிழக அரசின் உத்தரவு காரணமா தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை உயர்நீதி மன்றம், மனுதாரர்களை பணி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணை வெளியிட்டது.  இந்த உததரவுபடி தங்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என  சிவகங்கை அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  நான் 30.4.2020-ல் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020-ல் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையால் 31.5.2020-ல் வழக்கமாக ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். என்னைப்போல் ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்றவர்களுக்கு பலனில்லை. இந்த அரசாணை ஆசிரியர்கள்  மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.

எனவே 31.5.2020-ல் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020-ல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை என்னை மே 31-ல் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர், விருதுநகர் முத்துராமலிங்கபுரம் சிவசங்கர், செம்பட்டி பார்வதி, திருப்பத்தூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதானவிசாரணை மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பு இன்று விசரணைக்கு வந்தது.  விசாரணையைத் தொடர்ந்து,  அரசுத்தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட  மனுதாரர் வழக்கறிஞர், ஜூன் மாதம் தொடங்க 2 நாள் மட்டுமே உள்ளது. இதனால் அதற்கு முன்பு மனுதாரர்களை பணியிலிருந்து விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதையேற்று மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.