சென்னை: கொரோனா வைரசை தடுக்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்விநிலையங்களுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மாத இறுதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க தலைமைச் செயலாளர் கே சண்முகம் தலைமையில் பணிக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இது தொடர்பாக 17 துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்களை பட்டியலிட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை தலைவர், சென்னை விமான நிலைய இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் உள்ளிட்டோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருப்பர்.