சென்னை

கவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்கப்படும்  மனுக்களை ஆன்லைனில் வழங்கத் தமிழக அரசு அங்கீகாரம் அளிக்கத் தகவல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தமிழக அரசுக்குப் பல மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 4 லட்சம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை வெளியிடப்படாமல் இருந்த இந்த மனுக்களின் எண்ணிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இந்த மனுக்களை எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும் என நடைமுறை உள்ளது.

இதற்கு ரூ.10 நீதிமன்ற ஸ்டாம்ப் அல்லது வங்கி வரைவோலை ஆகியவற்றை உடன் இணைக்க வேண்டி உள்ளது. இது மக்களுக்கு மிகவும் அலைச்சலை அளித்து வருகிறது. எனவே தகவல் ஆர்வலர்கள் தங்கள் மனுக்களை ஆன்லைன் மூலம் அளிக்கவும் அதற்கான கட்டணங்களையும் ஆன்லைன் மூலம் அளிக்கவும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் இரண்டாம் முறையாக மேல்முறையீடு செய்வது  மட்டுமே ஆன்லைனில் செய்யமுடியும். எனவே இதைப் போல் முதலில் அளிக்கும் மனு மற்றும் இரண்டாம் மேல் முறையீட்டு மனு ஆகிய இரண்டையும் ஆன்லைனில் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசை ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த கோரிக்கையை விரைவில் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கத்தின் பொருளாளர் நக்கீரன் கேட்டுக் கொண்டுள்ளார்.