சென்னை:

மிழக சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய  தமிழ் வளர்ச்சித் துறை  அமைச்சர். மா.பா.பாண்டியராஜன், திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதிய விருதுகள் அறிவிக்கப்படுவதாக கூறியவர், அதற்கான விவரங்களை பட்டியலிட்டார்.  அதன்படி,

 தமிழ் மொழியில் பிறமொழி கலப்பின்றி எழுதியும் வெளியிட்டும் வரும் பத்திரிகைக்கு சி.பா. ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் சிற்றிதழ் விருது வழங்கப்படும்.

ஆன்மீகத் தொண்டாற்றும் ஒருவருக்கு அருட்பெரும்ஜோதி வள்ளலார் பெயரில் விருது வழங்கப்படும்.

தமிழறிஞர் ஒருவருக்கு தேவநேயப் பாவாணர் பெயரில் விருது அளிக்கப்படும்,.

தமிழ்த் தொண்டாற்றி வரும் மகளிர் ஒருவருக்கு காரைக்கால் அம்மையார் பெயரில் விருது அளிக்கப்படும்.

வீரமாமுனிவர் நெறியில் தமிழ்ப்பணியாற்றி வரும் ஒருவருக்கு வீரமாமுனிவர் பெயரில் விருது அளிக்கப்படும்

இந்த விருதுகள் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுடன் கேடயம் சான்றிதழ் ஆகியவை உள்ளடக்கியதாக இருக்கும்.

மேலும்,  வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் பிறமொழியைச் சேர்ந்தவர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் தமிழ்ப் பயிற்றுவிக்கும் வகையில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்,  தமிழ் கற்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன்  திருக்குறளை உலக நூலாக ஐநா கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.