புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 4.5 லட்சம் குடும்பத்துக்கு இலவச நிலம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

ங்கிக்கரிக்கப்படாத புறம் போக்கு நிலத்தில் வசிக்கும் 4.5 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசு 3 செண்ட் நிலம் வழங்க உள்ளது.

தமிழகம் எங்கும் பல கிராமப் பகுதிகளில் வீடற்ற மக்கள் அங்கீகரிக்கப்படாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் பல முறை தங்களுக்கு நிலப்பட்டா அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு மாநிலம் எங்கும் சுமார் 4.5 லட்சம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இதில் மாவட்ட வாரியாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1.12 லட்சம் குடும்பத்தினர் இவ்வாறு வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் நீர்நிலைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். அடுத்த படியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70000, வேலூர் மாவட்டத்தில் 28000, விழுப்புரம் மாவட்டத்தில் 21000, திருவண்ணாமலை மாவட்டத்தில் 20000, கடலூர் மாவட்டத்தில் 14000 மற்றும் நாகை மாவட்டத்தில் 9000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மொத்தத்தில் நீர் நிலை பகுதிகளில் 2.86 லட்சம், விளை நிலங்களில் 79000 தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 70000 மற்றும் கோவில் நிலங்களில் 15000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் உள்ள நிலங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வசிக்க வசதியாக தமிழக அரசு ஓவ்வொரு குடும்பத்துக்கும் 3 செண்ட் நிலம் அளிக்க உள்ளது.

இந்த நிலம் வழங்கும் திட்டம் 6 மாதங்களுக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு இலவச நிலம் பெறுவோரின் வருட வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும் எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இந்த பயனாளிகளுக்கு பிரதமர் வீட்டு வசதி அல்லது முதல்வர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவச வீடுகள் கட்டித் தர உள்ளதாகவும் கூறப்படுகிறது.