சென்னை: தமிழகத்தில், 9,10,11ம் வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் அறிவித்துள்ள நிலையில், இந்த  ஆல் பாஸ் அறிவிப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொருந்தாது என சிபிஎஸ்இ அதிகாரிகள் அறித்துள்ளனர்.

இன்றைய  சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் 9,10,11ம் வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.   இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றித் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்று கூறினார்.

இது மாணாக்கர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே வேளையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில்,  தமிழக அரசின் அறிவிப்பு CBSE மாணவர்களுக்கு பொருந்தாது என்றும்,  CBSE பள்ளிகளில் பயிலும் 9, 10 & 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும் என தமிழக  CBSE அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.