சென்னை: தமிழகத்தில் 4 இடங்களில் உள்ள பரிசோதனை கூடங்களில் நாளொன்றுக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருக்கிறார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, திமுக உறுப்பினர் பொன்முடி துணைக்கேள்வி ஒன்றை எழுப்பினார். கொரோனா ரைவஸ் அச்சம் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய பயன்படுத்தி கொள்ள வேண்டும். அத்தகைய திட்டம் அரசிடம் உள்ளதா? என்றார்.

அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில் வருமாறு: எதிர்க்கட்சித் தலைவர் நேற்று கூட இந்த கோரிக்கையை வைத்தார். ஒரு பரிசோதனை மையத்தில் நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும் .

ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளது. தமிழகத்தில் 4 இடங்களில் உள்ள பரிசோதனை கூடங்களில் நாளொன்றுக்கு 500 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.

அப்பல்லோ, வேலூர் சிஎம்சி போன்ற சிறப்பான வசதிகளை கொண்ட தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் பரிசோதனையில் பயன்படுத்தி கொள்ள ஐசிஎம்ஆர் அனுமதி பெற்று ஈடுபடுத்திக்கொள்ளப்படுவார்கள்.

தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பரிசோதனையில் ஈடுபடுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்க உள்ளது. அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நான் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர். தனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அவரிடம் கேட்டபோது, தனக்கு இருமல் இருப்பதால், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில்லை என்று சான்றிதழ் பெற்று வருமாறு கூறியுள்ளனர் என்றார். அப்போது அவரிடம் இருமல் இருக்கிறதா, காய்ச்சல் இருக்கிறதா? மூச்சு திணறல் இருக்கிறதா என்று கேட்டேன்.

இந்த 3 அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தேன். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடு மற்றும் மாநிலங்களுக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்றார்.