தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலி என்ற தகவல் தவறானது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர் என்ற தகவல் தவறானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 43 மருத்துவர்கள் இறந்ததாக ஒரு தகவல் அண்மையில் வெளியானது. அந்த தகவல் குறித்து மக்களிடையே குழப்பம் நிலவியது.

இந் நிலையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படுவதை இந்திய மருத்துவசங்க தமிழக தலைவர்  மறுத்துள்ளார். ஆதலால், சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.

கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கையில் 18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் உள்ளனர். மற்றவர்கள் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் உள்ளனர்.

சென்னையில், கொரோனா தொற்றானது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பலி எண்ணிக்கையில் எதுவும் மறைக்கப்படவில்லை என்று கூறினார்.