இந்தியக் குடியுரிமையைத் திருப்பி அளிக்கும் தமிழகத்தின் கடைசி யூத குடும்பம்

சென்னை

மிழகத்தின் கடைசி யூத குடும்பம் அரசியல்வாதிகளின் அராஜகத்தால் இந்தியக் குடியுரிமையைத் திரும்ப அளிக்க உள்ளது.

சுமார் 400 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் ஏற்பட்ட மதக் கலவரங்களால் யூதர்கள் பலர் தமிழகத்தில் குடி புகுந்தனர்.  அவர்கள் சென்னையில் பாதுகாப்பாக இருந்து வந்தனர்.  அதன் பிறகு அவர்கள் பணி நிமித்தம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக உலகின் பல நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.  தற்போது ஒரே ஒரு யூத குடும்பம் மட்டுமே உள்ளது.

இந்த குடும்பத்தைச் சேர்ந்த 42 வயதான டாவிட் லெவி என்பவர் வர்த்தக கப்பல் பொறியாளராகப் பணி புரிகிறார்.   இந்த குடும்பத்தினர் அதிக மதிப்புள்ள ரத்தினங்களை வர்த்தகம் செய்பவர்கள் என்பதால் பல பிரபலங்களின் மதிப்பையும் நட்பையும் பெற்றுள்ளனர்.   டாவிட்டின் பாட்டியார் ராச்சல் சென்னை ஐஐடியில் பிசிக்ஸ் ஆசிரியையாகப் பணி புரிந்துள்ளார்.

ராச்சல் ஐசக் தெருவில் உள்ள யூதர்களின் தேவாலயம் இடிக்கப்பட்ட போது பெசண்ட் நகரில் மற்றொரு தேவாலயம் அமைக்கப் பாடுபட்டவர் ஆவார்.    மேலும் இவர்கள் இல்லத்துக்கு அருகே முன்னாள் முதல்வர் அண்ணாதுரை வசித்துள்ளதால் அவருடன் நல்ல நட்பு இருந்துள்ளது.  டாவிட் இன் மகள்களுக்குப் பெயர் சூட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆவார்.

இவர்களுக்குச் சொந்தமாக பெசண்ட் நகரில் உள்ள இடத்தில் ஒரு ஐபிஎச் அதிகாரியின் மகன் மற்றும் ஒரு அரசியல் பிரமுகரின் மகனுக்கு உணவு விடுதி அமைக்க வாடகைக்கு விடப்பட்டுள்ளது.  அங்கு விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்ததால் டாவிட் இடத்தை காலி செய்யச் சொல்லி இருக்கிறார்.  இதனால் அவரை சில குண்டர்கள் தாக்கி உள்ளனர்.   காவல்துறை கண்டு கொள்ளவில்லை என டாவிட் தெரிவிக்கிறார்.

அவருடைய தலையில் அடிபட்டு ரத்தம் சொட்டிய வீடியோ உலகெங்கும் பரவவே பல்வேறு நாடுகளில் உள்ள அவர் சொந்தக்காரர்கள் அவரை உடனடியாக சென்னையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.  அவர் மனைவி மற்றும் குடும்பத்தினர் அமெரிக்கத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

தனக்குச் சென்னையில் பாதுகாப்பு இல்லை என்பதால் டாவிட் தனது இந்தியக் குடியுரிமையைத் திரும்ப அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அவரிடம் ஜெர்மன் பாஸ்போர்ட் உள்ளது.  எனவே அவர் ஜெர்மனி அல்லது வேறு ஏதாவது நாட்டின் குடியுரிமை  பெற்று அந்நாட்டில் குடியேற முயற்சி செய்து வருகிறார்.  இன்னும் ஒரு மாதத்தில் தாம் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.