சென்னை,
மிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தடை மேலும் 3 வாரம் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதமே  நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் திமுகவின் வழக்கு காரணமாக  ரத்து செய்யப்பட்டது. தற்போது அதன் விசாரணை மேலும் 3 வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  இதனால், உள்ளாட்சி தேர்தல் மேலும் தாமதமாகும் என்பது தெரிகிறது.
கடந்த  அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்திருந்தது.
chennai-high-court-1
ஆனால், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இட ஒதுக்கீடு சரிவர கடைபிடிக்கவில்லை என்று கூறி, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் வேட்பாளர்களுக்கு புதிய வழிமுறைகளை வகுக்க உத்தரவிட்டார். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கூடாது  என்று புதிய குறிப்புகள் வேட்புமனுவில் இடம்பெற வேண்டும் என்று கூறினார்.
இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டு அமர்வில் மேல்முறையீடு செய்தது.
ஆனால்,  மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தல் ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், திமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தின் 27 பக்க மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.
இதனால்  வழக்கு 3 வாரத்துக்கு  ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.  இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான தடை மேலும் 3 வாரத்துக்கு நீடிக்கிறது.
இதனால் தேர்தல்  மேலும் தாமதமாகும் என தெரிகிறது.