சென்னை:
ஜூலை மாதம் முதல் வாரத்தில்  பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர் முடிவு அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறினார். தற்போது, கொரோனா ஊரடங்கால் பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் பிளஸ்2 தேர்வு தொடங்கி கடைசி நாளான மார்ச் 24ந்தேதியுடன் முவடைந்தது.  அதேபோல பிளஸ் 1 தேர்வுகள் 26-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.
ஆனால், கொரோனா தடுப்பு ஊரடங்கு மார்ச் 24ந்தேதி முதல் அமல்படுத்தியதால், பிள12 கடைசி தேர்வை பெரும்பாலான மாணவ மாணவிகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அதுபோல 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைத்துள்ள தமிழக அரசு, தற்போது அதை முழுவதுமாக ரத்து செய்து விட்டது.
இதையடுத்து,  12-ஆம் வகுப்பு  தேர்வு தாள்களை திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில்  தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல் பரவி வந்தன. ஆனால்,  32 ஆயிரம் மாணவர்களின் கடைசி தேர்வு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், தேர்வு முடிவு வெளியிடுவதில் சிக்கல் நீடிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன்  கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்,தேர்வை எழுத முடியாமல் போன 32 ஆயிரம் பிளஸ்2  மாணவர்கள் குறித்து   இன்று மாலைக்குள் அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாவட்டம் தோறும் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10ம் வகுப்பு மாணவர்கள் என மாவட்டத்திற்கு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வு தேதியை முதல்வர் இன்று மாலை வெளியிடுவார்.
பிளஸ் 2 மாணவர்கள் 34,482 பேர் கடைசி தேர்வை எழுதவில்லை. அவர்களில்  718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தேர்வு முடிந்த 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
பிளஸ் 1,பிளஸ் 2 பாடத் திட்டம் கடந்த ஆண்டு இருந்ததே தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.